அரசு மருத்துவர் மீது பரபரப்பு புகார் சொல்லும் நர்ஸ்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தலைமை செவிலியராக உள்ள அமுதா அந்த மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெகன் மீது மோசடி போன்ற பரபரப்பான புகார்களை அடுக்கடுக்காக கூறியுள்ளதால் ஏற்பட்ட பரபரப்பு சாலை மறியல் வரை சென்றுள்ளது.
செவிலியர் அமுதா கூறும் போது.. இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக உள்ள ஜெகன் மருத்துவமனை மருந்துகளுக்கு பதிலாக அவர் வைத்துள்ள மெடிக்கல் மருந்துகளை வாங்கி வரச் சொல்லி நோயாளிகளிடம் பணம் கறக்கிறார். நிர்வாகச் செலவுக்காக வரும் பணத்தை மாரியம்மாள் என்ற பெயரில் போலியாக பில் தயாரித்து பணத்தை எடுத்துவிடுகிறார். மேலும் மருத்துவமனை ஊழியர்களை தரக்குறைவாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டால் அவரது உறவினர்களை வைத்து மிரட்டுகிறார்.
அடுத்த மாதம் நடக்கும் தணிக்கையில் உண்மையான ரசீது வைத்து கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டதால் தலைமை மருத்துவர் நான் எனக்கு தெரியும் என்கிறார். தணிக்கைக்கு கணக்கு காட்ட வேண்டியது நான் அதனால் என்னிடம் கணக்கு கொடுங்கள் என்று சொன்னதால் மேலும் மிரட்டுகிறார் என்று அடுக்கடுக்காண புகார்களை முன் வைத்தார்.
அதற்கு தலைமை மருத்துவர் ஜெகன்.. செவிலியர் அமுதா சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளம் பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்ததுடன் எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை முகம் சுளிக்காமல் சிகிச்சை பார்த்து அனுப்புகிறேன் என்றார்.
இந்த நிலையில் மணமேல்குடி நகர வர்த்தக சங்கத்தினர் திடீரென காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கடையடைப்பு செய்தனர். டாக்டர் ஜெகன் நடத்தும் கிளினிக்கை மெடிக்கல் செவிலியர் அமுதாவின் கணவர் உள்பட 15 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்துள்ளது. அதை பக்கத்து கடைகாரர் கேட்ட போது அவரது கடையையும் உடைத்துள்ளனர். அதனால் அமுதாவை இடமாற்றம் செய்வதுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைக் கண்ட செவிலிரயர்கள் மருத்துவர் ஜெகனை இடமாற்றம் செய்யும் வரை விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டாக்டர், நர்ஸ் மோதல் மணமேல்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சில மருத்தவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-இரா.பகத்சிங்