திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இரண்டு ஒன்றியங்களில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் தொகுதி எம்எல்ஏவும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணியிடம் அந்தந்தப் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை, லைட்வசதி இல்லை, சாக்கடை வசதி இல்லை. அதுபோல் வறட்சி நிவாரணம் சரி வர கொடுக்கவில்லை. வரி உயர்வை குறைக்க வேண்டும் என பல கோரிக்கைகளையும், குறைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கக் கோரி மனு கொடுத்தனர்.
இப்படி தொகுதி மக்கள் கொடுத்த மனுக்களை எல்லாம் தொகுதி எம்எல்ஏவான சக்கரபாணி மாவட்ட கலெக்டர் வினையிடம் கொடுத்து தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும்உடனே நிறைவேற்றிக் கொடுக்கக் கோரி வலியுறுத்தினார். அப்படியிருந்தும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்ததால் ஆத்திரமடைந்த தொகுதி எம்எல்ஏவான சக்கரபாணி ஒட்டன்சத்திரம் தொகுதியிலுள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பெரும் திரளாக திரட்டி ஒட்டன்சத்திரத்தில் உள்ள அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டனக் குரல் கொடுத்ததுடன் மட்டுமல்லாமல் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் நகரமே ஸ்தம்பித்தது போய் விட்டது.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மேற்கு மாவட்டச் செயலாளரும், தொகுதி எம்எல்ஏவான சக்கரபாணியோ.... மக்களுக்காக இந்த அரசு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டுவரவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் மக்கள் விரோதப் போக்கைத் தான் கடைப்பிடித்து வருகிறது. அதனாலதான் மக்களைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். அதன் மூலமாவது இந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை உட்பட அனைத்து கோரிக்கைகளையும், குறைகளையும் நிறைவேற்றித் தர முன்வர வேண்டும். அதற்கும் இந்த மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்றால் கூடிய விரைவில் இதைவிட பலமடங்கு பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
அதுபோல் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களோ.... எங்க எம்எல்ஏ அண்ணன் சக்கரபாணி சொன்னது போல் உடனடியாக எங்களின் அடிப்படை வசதிகளை இந்த அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் குடிநீரைக் கூட ஒரு குடம் பத்து ரூபாய் கொடுத்து வாங்கி குடித்து வருகிறோம். அந்த அளவுக்கு எங்க தொகுதி மக்களின் நலனுக்காக காவிரியிலிருந்து எங்க எம்எல்ஏ சக்கரபாணி கொண்டு வந்த கூட்டு குடிநீர் திட்டத்தை இந்த அரசு அங்கங்கே கிடப்பில் போட்டு விட்டது. அதனால் தான் தொகுதியில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடி வருவதால் தான் குடி தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறோம். எங்க எம்எல்ஏ சொன்னது போல் அடுத்தகட்ட சாலை மறியலுக்கு முன்பு அல்லது பாராளுமன்றத் தேர்தலுக்குள் எங்களுடைய கோரிக்கைகளையும், குறைகளையும் மாவட்ட நிர்வாகம் உடனே நிறைவேற்றி கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி,நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி,வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்வரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் உள்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.