

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியரசை கண்டித்து தமிழகத்தில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. உச்சநீதிமன்றம் தமிழர்களுக்கு சரியான நீதி கிடைக்கும் என்கிறது. ஆனால் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமைய்யா ஏப்ரல் 5ந்தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிடக்கூடாது என்றுள்ளார். இது தமிழகத்தில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்த கோபம் கர்நாடகா பேருந்து மீது காட்டவைத்துள்ளது.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பிப்ரவரி 6ந்தேதி இரவு 8 மணிக்கு, கர்நாடகா மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கிரிவலப்பாதை வழியாக சென்றுள்ளது. அப்போது யாரோ சிலர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை குறிவைத்து கல்லைக்கொண்டு வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இதனால் பயந்துப்போன பேருந்து ஓட்டுநர் மீண்டும் பேருந்தை கொண்டு வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். புகாரை பார்த்தபின்பே இப்படியொரு விவகாரம் நடந்தது போலிஸாருக்கு தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர். புகாரை பெற்ற போலிஸார், கர்நாடகா பேருந்தின் கண்ணாடியை உடைத்தது யார் என விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனால் தற்காலிகமாக கர்நாடகா பேருந்துகள் திருவண்ணாமலையில் இருந்து இயக்காமல் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுவிட்டன. அதோடு, காவல்துறை பேருந்துநிலையம் உட்பட பேருந்து பனிமனைகளில் பாதுகாப்புக்காக ரோந்து வருகின்றனர்.