மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்ததில் முழு திருப்தி அடைந்ததாக, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி பெருமிதம் கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி ஓய்வுபெற்றதை அடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியான வினீத் கோத்தாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார். குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காணொளிக் காட்சி மூலம் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தனது வழியனுப்பு விழா உரையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக, 2018ல் பொறுப்பேற்ற வினீத் கோத்தாரி, இந்த இரண்டு ஆண்டுகளில் 8 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, “பெருமைக்குரிய சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியதைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது இரண்டாவது வீடான சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து குஜராத்துக்கு மாற்றப்பட்டது வேதனையளிக்கிறது. நான் பணியாற்றிய ராஜஸ்தான், கர்நாடகா உயர் நீதிமன்றங்களை ஒப்பிடும்போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திறமையானவர்கள்.
இங்கு பணியாற்றிய ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவமாக இருந்தது. சிறு கசப்புணர்வு கூட இல்லை. கரோனா தொற்று காலத்தில் ஆன்லைன் மூலம் வழக்குகளை விசாரித்தது நல்ல அனுபவமாக இருந்தது. மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது எனக்கு முழு திருப்தியை அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜிப் பானர்ஜிக்கு, வரும் திங்கட்கிழமை ஆளுனர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில், ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.