தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இன்று பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவைகள் இயங்காது. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி. இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. இன்றும், வார இறுதி நாட்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று உணவகங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்யலாம். மின்னணு வர்த்தக விநியோகம் மட்டுமின்றி சொந்த விநியோக முறையில் உணவகங்கள் டெலிவரி செய்யலாம். இன்று திருமண நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமண அழைப்பிதழைக் காண்பித்து தங்களின் பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் நூறு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக சென்னை கத்திப்பாரா பாலத்தில் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.