திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவானது கடந்த 3ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. 14ஆம் தேதியான நேற்று மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சக லக்கினத்தில் ரத்தினங்கி பாண்டியன் கொண்டை பச்சைக்கிளி அலங்காரத்துடன் புறப்பட்டு, அதிகாலை 4:44 மணிக்கு ‘ரெங்கா ரெங்கா கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் பரமபத வாசலைக் கடந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தெற்கு கோபுர வாசல் வழியாக 1,37,507 பக்தர்கள் வந்துள்ளனர். அதேபோல், வடக்கு கோபுர வாசல் வழியாக 22,710 பக்தர்கள் என மொத்தம் 1,60,217 பக்தர்கள் நேற்று ஒருநாள் மட்டும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.