தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின், முதல் நாளில் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில் ஆவின் பால் விலை குறைப்பும் ஒரு முக்கியமான திட்டமாக இருந்தது. தமிழக அரசின் இந்த திட்டத்தின்படி, ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணை தற்போது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த அரசாணையில் இருக்கும் விலையேற்றம் குறித்த வரிகளைக் குறித்து, பாலின் விலை ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டு, அதிலிருந்து மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த அரசாணை தவறான புரிதலுடன் பரப்பப்படுவதாக திமுக தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக பால்வளத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
மேலே படிக்கப்பட்ட அரசாணையில் 19.08.2019 முதல் கீழ்க்கண்டவாறு பால் கொள்முதல் விலை மற்றும் பால் விற்பனை விலையை உயர்த்தி ஆணை வெளியிட்டது.
1.கொள்முதல் விலை :
அ) ஒரு லிட்டர் பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28இல் இருந்து ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆ) ஒரு லிட்டர் எருமைப்பாலின் தற்போதைய கொள்முதல் விலை ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு ரூ.35இல் இருந்து ரூ.41 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
2. விற்பனை விலை :
அ) அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 மட்டும் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
2. பொதுமக்களின் நலன் கருதி பால் விற்பனை விலையினை அரசு நன்கு பரிசீலனை செய்து அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6இல் இருந்து ரூ.3 ஆகக் குறைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு ஆணை வருகிற 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 2019ஆம் ஆண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்திய அரசாணையைப் பற்றிக் குறிப்பிட்டு, அதன்பிறகு 2019ஆம் ஆண்டு விலையேற்றம் செய்யப்பட்ட அந்த ஆறு ரூபாயிலிருந்து தற்போது மூன்று ரூபாய் விலை குறைப்பு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டதை தற்போது உயர்த்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவது எதிர்க்கட்சியினரின் சதி என்று குற்றம்சாட்டும் திமுகவினர், 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பால் விலை ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.