கரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருவதை தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும் என்று சொன்னாலும் காய்கறிகள் விலை அதிகமாக ஏற்றப்பட்டது.
இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நடமாட்டம் இருந்தது. காலை 10 மணிக்கு பிறகு போலீசாரால் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. உத்தரவை மீறி சாலையில் பயணம் செய்தவர்களை போலீசார் வாகனங்களை நிறுத்தி அறிவுறைகள் சொல்லி அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் காய்கறிகள் உற்பத்தி அதிகம் என்றாலும் அதற்கான கமிசன் கடைகள் திறக்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 100 கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் மல்லிகை, கனகாம்பரம், முல்லை, ரோஜா, பிச்சி, சம்பங்கி போன்ற மலர்கள் கீரமங்கலம் மலா் கமிசன் கடைகள் மூலம் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 டன் வரை மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் நேற்று முதல் உற்பத்தியான மலர்கள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. மேலும் இன்று முதல் தோட்டங்களிலேயே தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டமடைந்து வருகின்றனர்.