மாற்று சமூக பெண்ணின் குழந்தை தமக்கு எப்படி வாரிசாக முடியும்..? என தன்னுடைய மகனின் ஒரு மாத குழந்தையையே கடத்தி, பெற்றோர் கடத்தல் நாடகமாடியிருந்த நிலையில், பல இடங்களில் கைமாறி ஒளித்து வைக்கப்பட்ட குழந்தையை போராடி மீட்டுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியினை சேர்ந்தவர் தைனீஸ்மேரி. இவரும் காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த அருணும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு இதே ஊரில் செக்காலை முதல் வீதியில் தனியாக வசித்து வந்தனர். சாதி மறுப்புத் திருமணம் செய்த இத்தம்பதியினருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மதிய வேளையில் தனது கணவன் அருண் வீட்டில் இல்லாத நிலையில், இவர்களது வீட்டிற்கு வந்த அருணின் தாய் ராஜேஸ்வரி பிறந்திருந்த குழந்தையை வாஞ்சையாக அணைத்துக் கொண்டு, "உம் மாமனார் குழந்தையைப் பார்க்கனும்னு ஆசைப்படுறார். கொண்டு போய் காண்பித்துவிட்டு வருகின்றேன்." எனக் கூறி ஒரு மாதக் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.
இதுக்குறித்து கணவன் அருணிடம் கூறியிருக்க இதோ வந்துவிடுவார். அதோ வந்துவிடுவார். என வாசலையே வெறித்துப் பார்த்து சோர்வடைந்த நிலையில் இரவு 9 மணியளவில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தாரை அனுகியிருக்கின்றார் தைனீஸ்மேரி. புகார் மனுவினை வாங்கிக் கொண்ட வடக்கு காவல்துறையினர் மனு ரசீது 663ஆக பதிவு செய்து காரைக்குடி காவல்துறை டி.எஸ்.பி. அருணுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காரைக்குடி காவல்துறை டி.எஸ்.பி. அருண், தலைமையில் எஸ்.ஐ,தினேஷ், ஏட்டையா கருப்பையா மற்றும் போலீஸ் கருணாகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடிய நிலையில் நள்ளிரவில் மீட்கப்பட்டது ஒரு மாத குழந்தை.
"புகார் பெற்ற நிலையிலேயே அருணின் தாயார் ராஜேஸ்வரியை விசாரித்தோம். அவரோ, "கணவர் ஆரோக்கியத்திடம் காண்பிக்க குழந்தையை தூக்கிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த பொழுது தன்னை தாக்கி குழந்தையையும், செல்போனையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர்." என்றார். அவர் கூறிய தகவலின்படி குழந்தைக் கடத்தப்பட்டதாகக் கூறிய சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்ததில் ராஜேஸ்வரி கூறிய எவ்வித நிகழ்வும் அங்கு நடக்கவில்லை. மீண்டும் அழுத்தமாய் விசாரிக்க அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் பெண் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டதாகக் கூற, அவரையே அழைத்துக் கொண்டு அங்கு விசாரிக்கையில், "தன்னிடம் குழந்தையில்லை. தான் வேறு ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டதாக கூறினார். இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு செல்ல பசியால் சோர்வடைந்த நிலையில் இருந்த குழந்தை மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அடிப்படை விசாரணையில் தனது மகனும், மருமகளும் வேறு வேறு சமூகம் என்பதால், பெண்ணின் வயிற்றில் பிறந்த குழந்தை எப்படி தனது வாரிசாக முடியும். என்கின்ற எண்ணத்திலேயே இச்செயலை ராஜேஸ்வரி செய்திருப்பதாக தெரிகின்றது.
இதுக்குறித்து குழந்தையின் தந்தையான அருணிடம் பேசியதில் அவர், “அவர்கள், மகன்தான் நம்மைவிட்டு தனியாக இருக்கிறான், பேரனையாவது நாம் வளர்ப்போம் என்றுதான் தூக்கிச்சென்றார். ஆனால், எதிர்பாரதவிதமாக இப்படி நடந்துவிட்டது.” என்று தெரிவித்தார். எனினும் தொடர்ந்து விசாரணை தொடர்கின்றது என்கின்றனர் காரைக்குடி துணைச்சரக காவல்துறையினர்.
காவல்துறையினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டி வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர் காரைக்குடி நகரவாசிகள்.