தமிழகத்தில் மது அருந்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவருகிறது. அதேபோல், பண்டிகை காலங்களில் மதுவிற்பனை இன்னும் கூடுதலாக இருந்துவருகிறது. கரோனா, பரவல் தடுப்பு நடவடிக்கையாகக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் கடந்த 13ம் தேதி போகிப் பண்டிகை அன்று சென்னை மண்டலத்தில் மது விற்பனை ரூ.39 கோடி 13 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.41 கோடி 58 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.40 கோடி 67 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.42 கோடி 70 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.38 கோடி 96 லட்சம் எனத் தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.203 கோடியே 5 லட்சம் அளவிற்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 55 கோடியே 3 லட்சம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 14ஆம் தேதி பொங்கல் அன்று தமிழக அளவில் மொத்த மது விற்பனை ரூ.317 கோடியே 18 லட்சம். இதுவும் கடந்த ஆண்டைவிட ரூ. 47 கோடியே 65 லட்சம் அதிகம். அதேபோல், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மொத்த மது விற்பனை 675 கோடியே 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 102 கோடியே 95 லட்சம் ரூபாய் அதிகமாக மது விற்பனையாகி உள்ளது.
அதேசமயம், காணும் பொங்கலான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு படையெடுத்தனர் தமிழ்நாடு எல்லையில் இருந்த மது அருந்துவோர்கள். சாலை வழியாகச் சென்றால் காவல்துறை போக்குவரத்தைத் தடை செய்யும் என்பதால், புதுச்சேரி கடலூர் மாநில எல்லையில் ஓடும் பெண்ணை ஆற்று தண்ணீரில் நீந்திச் சென்று மது அருந்தியுள்ளனர். காவல்துறையினர் அங்கும் கண்காணிப்பு பணியில் இருந்தனர். ஆனாலும், அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுச் சென்று வந்தனர்.
அதேசமயம், புதுச்சேரி தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே 30க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி பகுதியில் இருந்து சைக்கிளில் கும்பலாக வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் புதுச்சேரிக்குச் சென்று மது அருந்திவிட்டு வருவது தெரியவந்தது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.