கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவியின் உடற்கூறுப் பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினர், அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற தடவியல் நிபுணர் மற்றும் அரசு மருத்துவர்கள் மூன்று பேர் கொண்ட குழு முன்னிலையில் கடந்த மாதம் 19- ஆம் தேதி அன்று மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின் மாணவியின் உடற்கூராய்வு பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாணவியின் உடற்கூராய்வுப் பரிசோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், புதுச்சேரி ஜிப்மர் குழுவிடம் ஒப்படைத்தனர். உடற்கூராய்வுப் பரிசோதனை முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்த குழுவினர், அதற்கான அறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில், தாக்கல் செய்தனர்.
இதனிடையே, உயிரிழந்த மாணவியின் தோழிகள் இருவர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.