அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்துக்கான திட்டச்செலவு உயர்த்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட திட்டச்செலவான ரூ. 20 ஆயிரத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும். ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். இதேபோல் 20 மண்டலங்களில் 25 இணைகள் வீதம் ஆண்டுக்கு 500 இணைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அனுமதிக்கப்பட்ட கோவில்களில் ஏழை எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். ஒரு திருமணத்திற்கான திட்டச்செலவு ரூ. 20 ஆயிரமாக இருந்தது. 500 திருமணங்களுக்கு மொத்தமாக தேவைப்படும் மொத்தச்செலவான ரூ. 1 கோடியை திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது திருமணத்தில் அனுமதிக்கப்பட்ட திட்டச்செலவான ரூ. 20 ஆயிரத்தை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் அதன் மதிப்பின் வீதம் திட்டச்செலவை தமிழ்நாடு அரசு தற்போது உயர்த்தியுள்ளது.