
சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு பிரபாகரன். இவர் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. சொந்தமாக டெக்ஸ்டைல் நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் பணம் தேவைப்பட்டதால் பணத்தை புரட்டுவதற்கு ஆயத்தமாகியுள்ளார்.
அப்பொழுது ஜெயலட்சுமி என்ற பெண் ஒருவர் உங்களுக்கு தேவையான ஐந்து கோடி ரூபாய் பெற்றுத் தருகிறேன் எனக்கூறி அவரிடமிருந்து 30 லட்சம் ரூபாயை பெற்றதாக அன்பு பிரபாகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் தன்னுடைய உறவினர்கள் எனவே தன்னால் உங்களுக்கு தேவையான தொகை 5 கோடியை ஏற்பாடு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். ஆனால் தொழில் செய்ய பணமும் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை தான் கொடுத்த 30 லட்சம் ரூபாயையும் தரவில்லை என அன்பு பிரபாகரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்தநிலையில் ஓபிஎஸ் உடன் சம்பந்தப்பட்ட பெண் ஜெயலட்சுமி இருக்கும் புகைப்படத்தையும், தன்னுடைய புகாரையும் எடுத்துக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், தனக்கு நடந்த மோசடி குறித்து புகார் கொடுத்துள்ளார். பணத்தை திரும்பத் தரும்படி கேட்டால் தன் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். தன்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்ற குற்றச்சாட்டைப் புகாரில் முன் வைத்துள்ளார்.