இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட், நிதி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக தேவநாதன், குணசீலன், மகிமைநாதன் உள்ளிட்ட 3 பேரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி (13.08.2024) அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த கைதைத்தொடர்ந்து தேவநாதன் உள்ளிட்ட மூவரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மலர் வேலன்டீனா அமர்வில் கடந்த மாதம் 14ஆம் தேதி (14.08.2024) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி (28.08.2024) வரை என 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து தேவநாதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கப் பொருளாதார குற்றப்பிரிவுக்குச் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மேலும் செப்டம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் அவரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் 7 நாட்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதனை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி இருந்தனர். இத்தகைய சூழலில் தான் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று (19.09.2024) அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன், அவருக்கு உதவியாக இருந்த சுதீர் ஆனந்த், தேவசேனாதிபதி உள்ளிட்ட 3 பேரிடம் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த பண மோசடி தொடர்பாக 4100க்கும் மேற்பட்டோர் சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தனர்.