ஆத்தூர் அருகே, முதலீட்டுத் தொகைக்கு அதிக வட்டி கொடுப்பதாக ஆசை காட்டி கிராம மக்களிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்த வியாபாரி, திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள், முருகேசன் என்பவர் தலைமையில் ஜூன் 13 ஆம் தேதி காலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது; ‘கீரிப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர், அதே பகுதியில் பெரிய அளவில் வணிக வளாகம் கட்டுவதாகக் கூறி அதற்காக முதலீடுகளை திரட்டினார். முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறினார்.
அதை நம்பி நாங்கள் ஒவ்வொருவரும் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை அவரிடம் கொடுத்தோம். இவ்வாறு எங்கள் ஊரைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோரிடம் 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளார். முதல் மூன்று மாதங்கள் வரை அவர் உறுதியளித்தபடியே எங்களுக்கு வட்டித் தொகை கொடுத்தார்.
அதன்பின் 9 மாத காலம் ஆகியும் வட்டி மற்றும் அசல் தொகையைத் தராமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து மல்லியக்கரை காவல்நிலையம் மற்றும் மாவட்டக் காவல்துறை எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும்.’ இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.