சென்னையில் ஆன்லைனில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற கல்லூரி மாணவி ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாகத் தருவதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி மாணவி மகாலட்சுமி திடீரென தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 30,000 ரூபாயை ஆன்லைனில் முதலீடு செய்த நிலையில் அது மோசடி எனத் தெரிய வந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மன உளைச்சலிலிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமானுல்லாகான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். கடந்த 10 நாட்களாக கொல்கத்தாவில் தங்கி மூன்று பேரையும் முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.