ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் மற்றும் கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிரனேஷ், யஷ்வந்த், கதிரேசன், ரகுராம், சுரேஷ் ராஜ் ஆகிய ஐந்து பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இவர்கள் 5 பேரும் இன்று அன்னூரில் இருந்து பவானிசாகர் அருகே உள்ள சித்தன் குட்டை பகுதிக்கு வந்தனர்.
அங்குள்ள பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் நீரில் இறங்கி பிரனேஷ் குளித்தபோது, நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினார். இதைக் கண்ட மற்ற நால்வரும் பிரனேஷை காப்பாற்ற முயன்றபோது யஷ்வந்த், கதிரேசன், ரகுராம் ஆகியோரும் நீரில் மூழ்கி மாயமாகி விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு மாணவன் சுரேஷ்ராஜ் சத்தம் போட்டுள்ளார் அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து நீரில் மூழ்கியவர்களை தேடினர். 4 மணி நேர போராட்டத்திற்கு பின் நீரில் மூழ்கி இறந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இறந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த இடத்திற்கு வந்து இறந்த உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.