சேலத்தில் கொலை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு ரவுடிகள் மீது ஒரே நாளில் குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலம் பொன்னம்மாபேட்டையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கைப்பற்றப்பட்டது. போலீசார் விசாரணையில், இறந்தவர் சேலத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பதும், முன்விரோதம் காரணமாக அவரை நான்கு பேர் கொலை செய்து, சடலத்தை தண்டவாளத்தில் வீசிச்சென்றிருப்பதும் தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம் குகை ஆற்றோரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பிரியாணி மணி என்கிற மணிகண்டன் (29), டாவு மணி என்கிற மணி (24), அம்மாபேட்டை அரசமரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிஜோதி (31), அஸ்தம்பட்டி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த குவார்ட்டர் முருகன் என்கிற முருகன் (37) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் கடந்த ஜூலை 30ம் தேதியன்று, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கத்தி முனையில் வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட நால்வரும் தொடர்ந்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷநர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர்.
அவருடைய உத்தரவின்பேரில் மேற்படி நால்வரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்தனர்.