சென்னையில் போதை பவுடர், கஞ்சா ஆகியவை விற்பனை செய்வதையும் வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன் பேரில் வடசென்னை பகுதியில் போதை பவுடர் பதுக்கி விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பெயரில் வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் ஆய்வாளர் ரவி மற்றும் தனிப்படை போலீசார் கொருக்குப்பேட்டை கெனால் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பைக்கில் வந்த ஐந்து பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அதில் நான்கு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த டார்வின் வின்சென்ட்(40), தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த வாசிம் ராஜா(31), தண்டையார்பேட்டை தமிழக நகரை சேர்ந்த சௌபர் சாதிக்(32), தண்டையார்பேட்டை இந்திராகாந்தி நகரை சேர்ந்த வேணுகோபால்(46) என தெரியவந்தது. மேலும், இவர்கள் மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பவுடரை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இவர்களிடமிருந்து ரூ. 21 லட்சம் மதிப்புள்ள 317 கிராம் மெத்தாம்பேட்டமைன் போதை பவுடர், 12 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு இருசக்கர வாகனம், 5 செல்போன், ஒரு எடை மெஷின் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் போதை பவுடரை கல்லூரி மாணவர்களுக்கும், தொழிலதிபர்களின் கேளிக்கை விடுதிகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தப்பித்து சென்ற முக்கியக் குற்றவாளியையும் போலீசார் தீவிரமாக் தேடி வருகின்றனர்.