கடலூரில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது 'அலீஃப்' எனும் அசைவு ஹோட்டல். இந்த ஹோட்டலில் நேற்று இரவு தாழங்குடா பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் ரைஸ் மற்றும் தந்தூரி சிக்கன் ஆகியவற்றை பார்சல் வாங்கி சென்றுள்ளார். அதை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரும் சிக்கன் ரைஸ் மற்றும் தந்தூரி சிக்கனை சாப்பிட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
உடனடியாக நான்கு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். சோதனையில் ஹோட்டலின் சமையல் கூடப் பகுதியில் காலாவதியான மசாலா பொருட்கள் மற்றும் கிரேவி ஆகியவை இருந்தது. உடனடியாக அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் நூடுல்ஸ், சிக்கன் ரைஸ், கிரேவி ஆகியவைகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.