திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான சிறியதும், பெரியதுமான காலணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலைக்கு ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் வேலைக்காக வருகின்றனர். அவர்களை அழைத்து வர கம்பெனி நிர்வாகம் வேன்களை வைத்துள்ளது.
அப்படியொரு வேன் மார்ச் 31ஆம் தேதி காலை 8 மணிக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. ஆம்பூர் அருகே சோலூர் மேம்பாலம் அருகில் வந்துகொண்டிருந்த அந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. வேன் நாற்கர சாலையின் சென்டர் மீடியன் என்கிற தடுப்பு சுவர் மீது மோதியது. அப்போது எதிர் சாலையில் கேரளாவுக்கு சென்ற லாரி, வேன் மீது மோதியதில், வேன் ஓட்டுநர் மற்றும் பெண் தொழிலாளர்கள் மூவர் என நான்கு பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயங்களோடு ஆம்பூர், வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்து ஆம்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் அதிகளவு விபத்து நடக்கும் சாலையாக சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கர சாலை உள்ளது என்பது குறிப்பிடதக்கது. தினம், தினம் இந்த சாலையில் குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் விபத்து நடந்துவருகிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகளுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்கின்றனர். அவர்களை வேலைக்கு அழைத்து செல்ல வேன்கள் இயக்கப்படுகிறது, இந்த வேன்களின் மின்னல் வேக பயணங்கள் பெரும்பாலான விபத்துக்கு காரணமாகின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.