நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நான்கரை வயது சிறுமி தரை மட்ட நீர்தேக்க தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி யார் என போலீசார் தீவிர விசாரணை விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் என்பவரது மனைவி சஜிதா வயது (32) இவருக்கு சுபாஷினி (வயது 14) ஸ்ரீஹர்ஷினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். முத்த மகள் கோத்தகிரியிலுள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். சஜிதாவின் கணவர் அதேபகுதியில் உள்ள சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அவர் இறந்த பிறகு அந்த வீட்டின் உரிமையாளர் சென்னையில் இருப்பதால் அவரது வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்யும் தொழிலாளியாக சஜிதா பணிபுரிந்து வந்துள்ளார். சஜிதாவிற்கு குடிப்பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை இரண்டாவது மகளான ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நேற்று மாலை சுமார் 4 மணிஅளவில் போலீசார் எம் கைகாட்டி பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். பின்னர் சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கும்போது அங்குள்ள சுமார் 8 அடி உயரமுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியின் முடியை திறந்து பார்த்தபோது அதில் பொம்மை ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டனர். உடனே அருகிலிருந்த காணாமல் போன குழந்தையின் சகோதரியை அழைத்து அந்த பொம்மை காணாமல் போன ஸ்ரீஹர்ஷனியுடையதா என்று கேட்க அவர் ஆம் என்று சொல்லியுள்ளார்.
இதனை தொடர்ந்து தொட்டிக்குள் நன்றாக தேடியபோது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் முழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிறுமியின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவமறிந்து பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குடிப்பழக்கம் உடைய சஜிதா தன்னுடைய நான்கரை வயது மகளை கிணற்றில் வீசி கொலை செய்தாரா? அல்லது வேறு காரணங்களால் வேறு யாரேனும் கொலை செய்து வீசி சென்றனரா? என்ற கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதிலுள்ள பதிவுகளை வைத்து உண்மையான குற்றவாளி யார் என்று விசாரணை செய்து வருகின்றனர் போலீசார்.