விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சிட்டாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளி வளாகத்தில் நேற்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் பச்சிளம் குழந்தையின் அழு குரல் கேட்டு, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், குழந்தை அழு குரல் கேட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது, பிறந்து ஒரு மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் ஒரு ஆண் குழந்தை கத்திக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் உடலில் எறும்புகள் கடித்து வீக்கம் கண்டிருந்த நிலையில் குழந்தையைக் கண்டெடுத்தனர்.
இதையடுத்து அப்பகுதி பெண்கள் அந்தக் குழந்தையை எடுத்து சுத்தம் செய்தனர். இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அனுப்பினர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தை கிடந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஆண் சிசுவை செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் குழந்தை நல்ல முறையில் பராமரிப்பது சம்பந்தமாகவும், குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காகவும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையை அரசு காப்பகத்தினர் மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். பிறந்து ஒரு மணி நேரமே ஆன நிலையில், குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் கேட்பாரற்றுக் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.