கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கொம்பாடிக்குப்பம், கீணனூர், பொன்னாலகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் என்.எல்.சி நிறுவனம் சுரங்கத்திற்காக தோண்டப்பட்ட மண்ணை மலைபோல் குவித்து வைத்துள்ளது.
மழைகாலங்களில் மணல்மேட்டிலிருந்து மண்ணானது கரைந்து அருகில் உள்ள விளைநிலங்களில் படிந்து விடுகிறது. இதனால் சுமார் 500-ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பல ஆண்டுகலமாக என்.எல்.சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நிவாரணமும், நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இப்பிரச்சனையால் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணல் படிந்த விவசாய நிலங்களை பார்வையிட வந்த என்.எல்.சி அதிகாரிகளை, விவசாயிகள் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு, வாகனங்கள் செல்ல முடியாமல் தரையில் அமர்ந்து, என்.எல்.சி நிர்வாகத்தின் அதிகாரபோக்கை கண்டித்தும், தமிழக அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தாசில்தார் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தலாம் என்று கூறியதன் பேரில் அதிகாரிகளை அனுப்பினர். மேலும் கலந்தாய்வு கூட்டத்தின் பின் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வருகின்ற 5 ஆம் தேதி விவசாயிகளை திரட்டி என்.எல்.சியின் இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்தனர்.