கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை நாளை (27.11.2023) காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த சிலையைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். மேலும் வி.பி. சிங் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜய சிங், அபய் சிங் ஆகியோருக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ளத் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.