அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்.7) வடகாடு கிராமத்தில் அவரது வீட்டில் வைத்தே ஒரு கும்பலால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். அதிகமான ரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சொந்த கார் ஓட்டுநரைக் காணவில்லை.இப்படி பல தடைகளைத் தாண்டி அவரது மகன் ராஜபாண்டியன் உயிருக்குப் போராடும் தந்தையை காரில் ஏற்றிக்கொண்டு துண்டான கையை காரின் முன்னால் வைத்துக் கொண்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறுதியில் வெங்கடாசலம் உயிரிழந்தார்.
இந்தச்சம்பவம் புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, பல நாட்கள் போக்குவரத்து முடக்கப்பட்டது. புதுக்கோட்டையிலிருந்து வடகாடு வரை சுமார் 30 கி மீ தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்போடு இறுதி ஊர்வலம் சென்றது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது ஆதரவாளர்களிடம் இன்றளவும் உள்ளது.
அதன் பிறகு அவரது நினைவு நாளை குருபூஜையாக முத்தரையர் மக்கள் கடந்த 11 வருடங்களாக அனுசரித்து வருகின்றனர். அமைச்சர்கள், திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் குருபூஜைக்குத் தமிழகம் முழுவதும் இருந்து வெங்கடாசலம் ஆதரவாளர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதும், அன்னதானம் வழங்குவதும் வழக்கம்.
இந்நிலையில் இன்று 11 ம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தது. பாதுகாப்பிற்காக சுமார் 300 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இன்று நினைவேந்தல் நிகழ்ச்சியில் கே.கே.செல்வகுமார், ஆர்.வி.பரதன் ஆகியோர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.