கரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பலவேறு காரணங்களால் ஐந்து முறை நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று கண்டிப்பாகத் தேர்தல் நடைபெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா ஆறு கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெறும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் திருவிக என்பவர் போட்டியிடுகிறார். இவரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களோடு திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். நான்கு வழிச்சாலையில் நாகம்பட்டி பாலம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.
அப்பொழுது அங்கு நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான திருவிகவை கடத்திச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.