கரூர் மாவட்டம் அரவகுறிச்சி பகுதிகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதியளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "2016 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அரவகுறிச்சி பகுதில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது தகுதி நீக்கம் செய்யபட்டு இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. 2016 தேர்தலின் போது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தேன். அவற்றை செயல்படுத்த மக்களின் பிரதிநிதியாக இருந்து குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
இதையடுத்து திட்டங்களை நிறைவேற்றிதர வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடந்த முடிவு செய்தோம். அரவகுறிச்சி தாலுகா அலுவலகம், கே.பரமத்தி கடை வீதி மற்றும் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
முந்தைய விசாரணையின் போது செப்டம்பர் 25 ல் கே.பரமத்தி கடை வீதி,செப்டம்பர் 27 ல் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, அக்டோபர் 4 ல் அரவகுறிச்சி ஆகிய பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்திரவிட்டிருந்தார்.
ஆனால் அரவகுறிச்சி டி.எஸ்.பி., உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதியளிக்கவில்லை. எனவே மாற்று தேதிகளில் உண்ணாவிரத போரட்டத்திற்கு அனுமதி கோரியும்,நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அரவகுறிச்சி டி.எஸ்.பி.,மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது செப்டம்பர் 30 ல் கே.பரமத்தி கடை வீதி, அக்டோபர் 5 ல் அரவகுறிச்சி தாலுகா பகுதியில், அக்டோபர் 8 ல் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளித்து உத்திரவிட்டார்.