காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை கடந்த புதன் அன்று ராகுல் துவங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை கொடுத்து இந்த யாத்திரையை தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்த பயணம் 150 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதில் மூன்றாம் நாளாக இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தனது நடைபயணத்தை துவங்கினார்.
இந்த பயணத்தில் பலதரப்பட்ட மக்கள் மற்றும் கட்சியினர் வழி நெடுகிலும் அவரை சந்தித்தனர். மூன்றாம் நாளான இன்று நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். நேற்று காலை நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தாரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.