முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா(73) ஐ.ஏ.எஸ். சென்னையில் காலமானார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த நரேஷ் குப்தா, 1973ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்டம் 1984ல் உருவாக்கப்பட்டு, 1985ம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் தனி மாவட்டமாக செயல்பட துவங்கியது. இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் நரேஷ் குப்தா.
நரேஷ் குப்தா, ஆளுநரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார். இவர், 1998 முதல் 2000ம் ஆண்டு வரையும், 2005 முதல் 2010 வரையிலும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர். 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் செயலாளராகவும் பணியாற்றினார். 2009ம் ஆண்டு முதல்முறையாக வெப் கேம்ரா மூலம் வாக்குப்பதிவைக் கண்காணிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
2010ம் ஆண்டு ஓய்வு பெற்ற நரேஷ் குப்தா சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.