முப்படையினரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி, படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தநாளில், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள, ஜவான் பவன் அருகே முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் துணைப் படை வீரர்கள் நலக் கூட்டமைப்பின் தலைவர், சுரேஷ் பாபு தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் பொதுச் செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவர்கள் கூறும்போது, "நாட்டிற்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு, 'புனர்ஜென்மம்' என்ற திட்டத்திற்கு, அரசு நிலம் ஒதுக்க வேண்டும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், வீட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும், அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு நீட் தேர்வில் இருந்து இட ஒதுக்கீடு செய்ய வேண்டும், பிற மாநிலங்களில் வழங்குவது போல் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடியும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.