புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் சரியாக இயக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர நாராயணசாமி, "நகரப்பகுதிகளில் 103 கண்காணிப்பு கேமிராக்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் இதனை காவல்துறையினர் கோரிமேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் யுஜிசியை கலைக்கும் விவகாரத்திற்கு மாநில அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், "யுஜிசியை கலைப்பதற்கு புதுச்சேரி மாநில அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார். அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, யுஜிசியை மத்திய அரசு கலைக்கும் விவகாரத்திற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இது சம்பந்தமாக வருகிற 20-ம் தேதிக்குள் இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.