Skip to main content

அதிமுக முன்னாள் அமைச்சரின் சிறைத் தண்டனை ரத்து; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Former AIADMK minister Balakrishna Reddy jail sentence cancelled

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 1998 ஆம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் நேற்று(3.7.2024) தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், காவல் துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை எனவும், பலவீனமான ஆதாரங்களே உள்ளதாகவும், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை எனவும் கூறி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கு; இன்றிரவே விசாரணை!

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Armstrong  wife is suing over his burial

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே(5.7.2024), பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி நாளை சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். 

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடலை கட்சி அலுவலகத்தில் அடைக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.  

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதியளித்ததால் இன்றிரவே நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

ரேசனில் 2 மாதத்திற்கான துவரம் பருப்பு பாமாயில் அனைவருக்கும் வழங்கப்படும்; அமைச்சர் சக்கரபாணி

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
ration of 2 months worth of dal palm oil to all says  Minister sakkarapani

ரேசனில் இரண்டு மாதத்திற்கான துவரம் பருப்பு பாமாயில் அனைவருக்கும் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக ஆட்சியில் 2017 ஜனவரி  மற்றும் பிப்ரவரி மாதங்களில் (எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிப்ரவரி மாதத்தில்) துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முற்றிலுமாக விநியோகிக்கப்படவில்லை. மே மற்றும் ஜூன் மாதங்களில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று,  கொள்முதல் செய்து அவர்கள் ஆட்சியில் போல் இல்லாமல் துவரம் பருப்பு  மற்றும் பாமாயில் எல்லோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக, கடந்த மாதம் 18ஆம் தேதி விரிவாக அறிக்கை வெளியிட்டு மே மாதம் பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் ஜூன் மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தேன். அதன்படி மே மாதத்திற்கான துவரம் பரும்பு மற்றும் பாமாயில் முற்றிலும் நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு  விநியோகிக்கப்பட்டுவிட்டன.  

கடந்த 27ஆம் தேதி உணவுத்துறை மானியக் கோரிக்கையின்  போதும் இதுபற்றி குறிப்பிட்டு ஜூன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ளாதவர்கள் ஜூலை மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம்  என்றும் அறிவித்திருந்தேன். அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு துவரம் பருப்பும் பாமாயிலும் வழங்கப்பட்டு       வருகின்றன. இதைத் தெரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே திமுக அரசு மீது வீண்பழி சுமத்தி எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தன் ஆட்சிக் காலத்தில் இரண்டு மாதங்கள் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் யாருக்கும் வழங்காமல் இருந்ததை எண்ணிப் பார்க்காமல் அனைவருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கி வரும் திமுக ஆட்சியைப் பற்றிக் குறை கூறுவது அழகா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.