தமிழகப் பகுதிகளில் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.