பெரம்பலூர் கடலூர் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களை இணைக்கும் பெரம்பலூர் மாவட்ட மேற்குப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் மான், மயில், காட்டுப்பன்றிகள் என பலவகை விலங்குகள் வாழ்கின்றன. இந்த விலங்குகளை இரவு நேரங்களில் அவ்வப்போது சென்று வேட்டையாடுகிறார்கள்.
வேட்டையாடும் அந்த நபர்கள் அவ்வப்போது வனத்துறையினரிடம் சிக்கி சிறைக்கும் செல்கிறார்கள். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்துகிறார்கள். அப்படியும் கூட வன விலங்குகளை வேட்டையாடுவது ஒரு தொடர் சம்பவமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி பெரம்பலூர் வனச்சரகர் சசி குமார் தலைமையில் வனத்துறையினர், பெரம்பலூர் மருதடி கிராமப் பகுதிகளில் உள்ள வனத்துறை காட்டில் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது வனத்துறை பகுதிதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனைக்குத் தயார் செய்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்த வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், பன்றியை வேட்டையாடிய காரை கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, செல்வம், சிறுவாச்சூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து வேட்டைக்குப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததோடு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மேலும் வனத்துறை காட்டில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள் வனத்துறை அதிகாரிகள். வன விலங்குகளை வேட்டையாடும் மர்ம கும்பலை அவ்வப்போது கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் போடுவது சிறைக்கு அனுப்புவது எனச் செயல்படுத்தி வருகிறார்கள் வனத்துறையினர். அப்படியிருந்தும் வன விலங்குகளை வேட்டையாடுவது குறையவில்லை.