கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.