கோப்புப்படம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும், உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.
இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா? அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.