Skip to main content

'வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

 

forest area chennai high court tn govt order



வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றிக் கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அவர் மனுவில், நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர், தமிழ்நாடு மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருவதாகவும், அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவித்துள்ளதாகவும், வனப்பாதையை விரிவுபடுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு இருந்தால் தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்த வழக்கு இன்று (30/06/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி ஆகியோரின் அறிக்கை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரிசார்ட்டுக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதி ரத்து, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, வனப்பகுதிக்குள் நடப்பட்ட மின்கம்பம் அகற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் நடவடிக்கையில் திருப்தி அடைவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ரிசார்ட் கட்டிய குற்றச்சாட்டுக்கு ஆளான மருத்துவர் கவிதா தரப்பில், வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்றும், வழக்கின் மனுதாரரே குற்றப்பின்னணிக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டது.

 

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மீட்கப்பட்ட வனப்பகுதியை மீண்டும் பழைய நிலைககு கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

வனத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொருவர் மீதும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கு நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்