




நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருக்கும் அகஸ்தியர் மெட்டுப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி வருவது தான் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி. அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட இங்கு காரையாறு, முண்டன்துறை புலிகள் சரணாலயம் உள்ளிட்ட கொடிய வனவிலங்குகள் உரையும் பகுதிகள் உள்ளன.
காட்டுமான், மிளா, புலி கரடி, சிங்கவால் குரங்கு, சாம்பல் நிற அணில் போன்ற அரியவகை விலங்குகளோடு காட்டெருமைகளும் இனப்பெருக்கத்தோடு வாழ்கின்றன. ஆனால் அதன் வகைகளின் எண்ணிக்கை பற்றிய கணக்குகள் வனத்துறை வசமில்லை. காரணம், சுற்றுலாப் பயணிகள், அடிக்கடி செல்லும் வாகனப் போக்குவரத்துக்கள் போன்றவைகளால் அந்த வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதும் தடைபடுவதுடன் வன விலங்குகளின் வகையும் கண்டறிய முடிவதில்லை. மேலும் அவைகளின் தொந்தரவுகள் வனவிலங்குகளைப் பாதிக்கவும் செய்வதாகச் சொல்லப்படுகிறது.
வனவிலங்குகளின் வகைகள், மற்றும் சுதந்திரமான நடமாட்டம், குறிப்பாக அவைகளின் இனப்பெருக்கம், போன்றவைகளுக்காக கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டத்தைப் பற்றியறிய வனத்துறையினர் மலைக்காடுகளில் ஆங்காங்கே கேமராக்களையும் பொருத்திவைத்தார்கள்.
சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகனப் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக அமைதியான தொந்தரவற்ற வனப்பகுதியில் சாலையில் வனவிலங்குகள் சுதந்திரமாக வலம் வருவது தெரிய வந்திருக்கிறது.
சிறுத்தை, மிளா, செந்நாய், காட்டெருமை, புள்ளிமான்கள் போன்ற விலங்குகளின் நடமாட்டம். பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள நவீன கேமராக்களில் பதிவாகியுள்ளன. மேலும் மக்களின் நடமாட்டத்திற்கான தடை வரும் 31 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் பாபநாசம் வனச் சரகத்திற்குட்பட்ட வடக்கு கோரையாறு, அனவன் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக யானைக் கூட்டங்கள் பயிர்களையும் தென்னைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பாபநாசம், முண்டன்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் கொம்மு ஒம்காரம் உத்தரவின் படி வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக வெடி வைத்தும் சப்தம் எழுப்பியும், யானைக் கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டிவருவதாகத் தெரிவித்தார் வனசரகர் பாரத்.