மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு, புழல் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டுக் கைதிகள், ஹஜ் சொசைட்டிக்கு மாற்றப்பட உள்ளதாக, தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டைச் சேர்ந்த 129 முஸ்லீம்கள், தமிழகத்தின் கோயம்புத்தூர், ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கி மதப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், உள்நோக்கத்துடன் நோய்த் தொற்று பரப்பியதாகவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் பெற்ற பிறகும், தங்களைச் சிறையிலிருந்து விடுவிக்காமல், சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைச்சாலை வளாகத்திலேயே வைத்துள்ளதாகக் கூறி, தங்களை விடுவிக்கக் கோரி. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், தமிழகம் முழுவதும், இதுவரை 14 முதல் தகவல் அறிக்கைகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவர்கள், சென்னை சூளையில் அமைந்துள்ள ஹஜ் சொசைட்டிக்கு இன்னும் 3 நாட்களில் மாற்றப்பட உள்ளனர். அதற்கான ஒப்புதல், ஹஜ் சர்வீஸ் கமிட்டியிடம் மாவட்ட ஆட்சியர் சார்பில் பெறப்பட்டுள்ளது. ஹஜ் கமிட்டி கட்டிடத்தில் 89 அறைகள் உள்ளன. போதிய கழிவறை வசதிகள், சுகாதார வசதிகள் தொடங்கி, தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசுத் தரப்பின் விளக்கத்தைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 20-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.