கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி பெண்ணாபுரம் பிரிவு பகுதியில் கடந்த 22ஆம் தேதி மதுவிலக்கு போலீசார ஆய்வு செய்த பொழுது சரக்கு வாகனத்தில் வெளி மாநிலம் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் ராம் நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அது தொடர்பாக 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இப்படியாக பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 வெளிமாநில மது பாட்டில்களும் அவற்றை விற்க முயன்றவர்களும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.