Skip to main content

நிர்பந்திக்கும் பாஜக; தயக்கத்தில் ஓபிஎஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 Forced BJP; Homeland OPS

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அ.தி.மு.க. அதன் கூட்டணிக்காக பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

மறுபுறம் பாஜக கூட்டணியில் உள்ள தமாக, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரம் டி.டி.வி.தினகரனின் அமமுக, மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால், பாஜக கூட்டணியை உறுதிசெய்யும் முன்னரே ஓபிஎஸ், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும், மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர வேண்டும் என அவருடைய விருப்பத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தி வந்தார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவில் தனித்து இருக்கும் ஓபிஎஸ் ஒருவேளை, பாஜக கூட்டணியில் நின்று போட்டியிட்டால் எந்த சின்னத்தில் நிற்பது என்பது தொடர்பான கேள்விகள் எழுந்தது. அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இரட்டை இலையில் நிற்பது சாத்தியமில்லாதது என்ற நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் பாஜக ஓபிஎஸ்ஸை தாமரை சின்னத்தில் நிற்க நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ தாமரையில் நிற்க மறுப்பு தெரிவித்ததால் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்