இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையைப் பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென வழக்கு ஒன்றில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் 19 ஆர்டர்லிகளைத் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனவா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முதலமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது என்றும், நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் அனைத்து குடிமக்களும் ராஜா, ராணிகள் தான் எனவும், நாம் அனைவரும் அவர்களின் சேவகர்கள் தான் எனவும் கூறினார்.
75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக் கேடானது என நீதிபதி வேதனை தெரிவித்தார். ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தைப் போதும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறைத் தலைவரிடமிருந்தோ வருவதில்லை எனக் கூறினார்.
தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளைக் கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யை எதிர் மனுதாரராகச் சேர்த்த நீதிபதி ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக, தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
பின்னர்,வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.