செம்மொழிப் பூங்கா, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். இந்த பூங்காவை 24 நவம்பர் 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். சாலை ஓரத்தில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழிப் பூங்காவை அமைத்தது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று (10.02.2024) முதல் தொடங்க உள்ளது. இந்த மலர் கண்காட்சியில் சுமார் 10 லட்சம் மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி மற்றும் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி சுமார் ஒரு வார காலம் வரை நடைபெறும் என தோட்டக்கலை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். தொடக்கவிழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா எனப் பலரும் கலந்து கொள்கின்றனர்.