சேலம் அருகே, தரையில் 200 ரூபாயை தாளை வீசியெறிந்து பூ வியாபாரியின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, அவர் வைத்திருந்த 4 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குட்லாடம்பட்டி வெட்டுக்காட்டைச் சேர்ந்தவர் பூபதி (வயது 51). சேலம் கொண்டலாம்பட்டியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்திற்குத் தேவையான பூக்களை, அவர் மல்லூரில் உள்ள மலர் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வருகிறார்.
இதையடுத்து பூக்களை கொள்முதல் செய்வதற்காக 4 லட்சம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிளில், வியாழக்கிழமை (மே 26) மல்லூருக்குச் சென்றுள்ளார். மல்லூரில் தர்கா அருகே உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர், உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் கீழே விழுந்துவிட்டது எனக்கூறியுள்ளார்.
அவரும் கீழே பார்த்தபோது தரையில் 200 ரூபாய் கிடந்துள்ளது. அந்தப் பணத்தை எடுப்பதற்காக பூபதி கீழே குனிந்தபோது, அவருடைய மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் உறையில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த மர்ம வாலிபர் தப்பிச்சென்று விட்டார்.
திட்டமிட்டே, 200 ரூபாய் தாளை கீழே போட்டுவிட்டு, கவனத்தை திசை திருப்பிவிட்டு, பூபதியின் பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு மர்ம நபர் தப்பிச்சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பூபதி, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
ராசிபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு பூபதி மல்லூருக்கு வரும்போது, அவரை பின்தொடர்ந்து இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்திருப்பது தெரிய வந்தது. அவர்கள்தான் 200 ரூபாயை கீழே வீசியெறிந்து, பூபதியின் கவனத்தை திசை திருப்பி, 4 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு ஓடியிருப்பது தெரிய வந்தது. அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் மல்லூர், கொண்டலாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.