தீபாவளிக்கு முன்பு பெய்த மழையினால் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் சூழ்ந்த தண்ணீர் வடிவதற்குள் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், கோரைத்திட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றின் கழிமுனைப் பகுதியாகும். ஒவ்வொரு ஆண்டும் பெய்து வரும் மழை வெள்ளம் முற்றிலுமாக இந்த பகுதி வழியாகவே கடலில் வடியும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, தென்மேற்கு பருவமழையினால் இதுவரை இல்லாத அளவிற்கு ஆறு முறை கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடைக்கோடி கிராமங்களில், 1200 ஏக்கர்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நேரடி விதைப்பு மற்றும் நடவு சம்பா பயிர்கள், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கால் தண்ணீர் சூழ்ந்து இருந்தன. தேங்கியிருந்த தண்ணீர் வடிய முடியாமல் 10 நாட்களுக்கும் மேலாகப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தன.
கடந்த நான்கு நாட்களாகக் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் விளைநிலங்களில் தேங்கியிருந்த தண்ணீரும் வடியத் தொடங்கியது. அழுகிய பயிர்கள் போக எஞ்சிய பயிர்களைக் காப்பாற்ற உரங்கள் இடும் பணிக்கு விவசாயிகள் தயாராகி வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
"கடந்த ஆண்டு இதேபோல் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பயிர்க்காப்பீடு செய்தும் காப்பீட்டு நிறுவனமும் அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர். கடந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்காததால் இந்த ஆண்டு கடனை வாங்கி சாகுபடியைத் தொடங்கினோம். தொடக்கத்திலேயே அழித்துவிட்டது. இந்த ஆண்டு காப்பீட்டுத் தொகை கட்டுவதற்குக் கூட மிகுந்த சிரமம் ஏற்பட்டிருக்கிறது." என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.