மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் இணைப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த சூழலில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் வைகை பூர்வீக பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வீதம் திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட ஆற்று நீர் மதுரை வைகை ஆற்றுப்பகுதிக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மதுரை வைகை ஆற்றில் இரண்டாம் நாளாக இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையில் இருபுறமும் உள்ள இணைப்பு சாலையில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை மொத்தம் 915 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.