கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர்ந்து கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இன்று காலை பில்லூர் அணையில் இருந்து உபரி நீராக 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹாடா, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லட்டி, ஊதிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பகுதி கிராம மக்கள் மாயாற்றைக் கடந்துதான் வியாபாரம் மற்றும் வேலைக்குச் செல்ல வேண்டும். அதேபோல் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும் மாயாற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்து உள்ளதால், இப்போது மக்கள் செய்வது தெரியாமல் திகைத்து வருகின்றனர். ஏற்கனவே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடப்பதும் பரிசலில் செல்வதும் உண்டு. இதனால் இந்தப் பகுதியில் தொங்கு பாலம் அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட வருடங்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.