வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் செல்ல சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ்கள் சிக்கல் இல்லாமல் செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வழித்தடங்களை சென்னை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.