கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற் பகுதியில் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட மிதவை கப்பல்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால் அதிக திறன் கொண்ட இழுவை கப்பலை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக்கலன் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 'மாருதி' என்ற மிதவை கப்பல் மூலமாக கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கலன்களை எடுத்து வந்த மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது. இதனை மீட்கும் பணி நேற்று காலையிலிருந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சிறப்பு வல்லுநர்கள் குழு இன்று காலை அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டது. மிதவை படகு மூன்று இடங்களில் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரி செய்யும் பணியில் மும்பையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இழுவை படகின் மூலம் மிதவை கப்பல் இழுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது கயிறு அறுந்து விட்டது. தற்பொழுது அதிக விசைத் திறன் கொண்ட இழுவை படகை மும்பை துறைமுகத்திலிருந்து வரவழைத்து தான் மிதவை கப்பலை எடுக்க முடியும் என வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று சிக்கிய மிதவை கப்பல் தற்பொழுது வரை அகற்றப்படாதது அங்கு சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.